Friday, September 23, 2011

எனக்குக் கிடைத்த சூப்பர் ஆப்பு!

நண்பர்களே, மிக நீண்டதொரு இடைவெளிக்குப்பின் எனது பதிவுகளை மீண்டும் தொடர்கிறேன்.

சென்ற பதிவில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எனக்கு ஆப்பு வைத்ததை பற்றி குறிபிட்டுருந்தேன். அது ஒரு சுவாரஸ்யமான கதை. நான் படிக்கின்ற காலத்தில், ஓவ்வொரு பாடத்திலும் இரண்டு விதமான மதிப்பீடுகள் உண்டு. ஒன்று எப்போதும்போல் தேர்வு எழுதி அதில் பெரும் மதிப்பீடு. அதை எக்ஸ்டர்னல் மதிப்பீடு என்பர். மற்றொன்று அந்த பாடத்தை கற்பிக்கும் ஆசிரியரே அந்த செமஸ்டரில் மாணவரை மதிப்பீடு செய்து வழங்கும் இன்டர்னல் மதிப்பீடு. ஒரு பாடத்திற்கு மொத்தம் நூறு மதிப்பெண்கள், அதில் எக்ஸ்டர்னல் 75 சதவிகித மதிப்பெண்கள், இன்டர்னல் 25 சதவிகித மதிப்பெண்கள். ஓவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற ஒரு மாணவர் குறைந்தபட்சம் எக்ஸ்டர்னலில் 35 மதிப்பெண்ணும், இன்டர்னலில் 10 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். இந்த இன்டர்னல் மதிப்பெண்ணை காட்டி பயமுறுத்தியே மாணவர்களை அழ அழ வைக்கும் புண்ணியவான்களும் உண்டு! ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் இன்டர்னலில் 22 அல்லது 23 மதிப்பெண்கள் போட்டு விடுவார்கள். இந்த இன்டர்னல் மதிப்பெண்களை ரெஜிஸ்டரில் பதிந்து பின்னர் அதை ஒரு மதிப்பெண் பட்டியலில் நகல் எடுத்து அனுப்பி வைக்கும் பணிக்கு பொதுவாக வேறு ஏதாவது துறையை சேர்ந்த மாணவரையே ஆசிரியர்கள் பணிப்பார்கள். இங்கேதான் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் சித்து வேலையை காட்டினார்கள். அந்த மாதிரி மதிப்பெண் நகல் எடுக்கும் மாணவரை எப்படியோ சரிகட்டி, என்னுடைய துறை தலைவர் பாடத்தில் இன்டர்னல் மதிப்பெண்ணை 24ல் இருந்து 4 ஆக நகலில் மாற்றி அனுப்பிவிட்டார்கள். இந்த தில்லுமுல்லை எனது துறை தலைவர் ஏனோ கவனிக்கவில்லை. ஒரே ஒரு மாணவனின் இன்டர்னல் மதிப்பெண் மிகவும் குறைவாக இருப்பதை எப்படி கவனிக்காமல் விட்டாரோ தெரியவல்லை. எல்லாம் என் நேரம் போல. நானும் எல்லா தேர்வுகளையும் நன்றாக செய்துவிட்ட மகிழ்ச்சியில் சென்னைக்கு எனது சித்தி வீட்டிற்கு சென்று விட்டேன். நான் சென்னையிலிருந்து திரும்புவதற்கும் தேர்வு முடிவுகள் வருவதற்கும் சரியாக இருந்தது. எங்கள் பாலிடெக்னிக்கில் தேர்வு முடிவுகளை நோட்டீஸ் போர்டில் போட்டு விடுவார்கள். அதில் இரண்டு லிஸ்ட்கள் இருக்கும். ஒன்றில் எல்லா பாடங்களிலும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெயர் இருக்கும். அதன் கீழே வெற்றி பெற்றவர்க்கு வாழ்த்துக்கள் என்று எழுதி தாளாளரும் பிரின்சிபாலும் கையெழுத்திடிருப்பார்கள். மற்றொன்றில் தேர்வில் ஒரு பாடத்திலோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட பாடங்களிலோ தோல்வி அடைந்தவர்கள் பெயர்கள் இருக்கும்.

நான் வழக்கம் போல நாம் பாஸ் பண்ணி இருப்போம் என்ற இறுமாப்பில் நோட்டீஸ் போர்டை போய் பார்க்கவில்லை. கிளாசில் தெனாவெட்டாக அரட்டை அடித்துக்கொண்டிரேந்தேன். திடீரென்று எனது நண்பன் கந்தசாமி அடித்து பிடித்து ஓடி வருவதை கண்டேன். அவன் முகம் பேயறைந்தது போல் இருந்தது. தூரத்தில் இருந்தே ஏதோ கையை ஆட்டிக் கொண்டே வந்துகொண்டிருந்தான். அருகில் வந்தவன் என்னிடம் "ஏம்லே நோட்டீஸ் போர்டைப் பார்த்தாயா?" என்றான். "இல்லை மக்கா" என்றேன். என்னைக் கையோடு இழுத்துச் சென்று நோட்டீஸ் போர்டை காட்டினான். பார்த்தால் என் பெயர் தோல்வி அடைந்தவர்கள் லிஸ்டில்! வேடிக்கை என்னவென்றால் எப்பொழுதுமே ஏதாவது ஒரு பாடத்தில்லாவது தோல்வி அடையும் நண்பன் கந்தசாமி பெயர் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்கள் லிஸ்டில்! அப்படியே அதிர்ச்சியில் உறைந்திருந்த என்னிடம் கந்தசாமி கேட்டான் "என்னைப் போய் எப்படிலே பாஸ் லிஸ்டிலே போட்டாங்க?"


அன்பன்
கிராம்

No comments: