Thursday, June 18, 2009

முதல் கணினி அனுபவம் - நீ எல்லாம் எங்க உருப்படப் போற ? ... தெருவில்தான் நிற்க போற !

என்னுடைய முதல் கணினி அனுபவமே மிகவும் வித்தியாசமாய் நேர்ந்தது! நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு (எத்தனை மார்க் என்றெல்லாம் கேட்க கூடாது. அதான் முடித்துவிட்டேனே!) திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் தட்டு தடுமாறி சேர்ந்து விட்டேன்.

"டேய் ! நீ எல்லாம் எங்க உருப்பட போற ? நேரம்னா உனக்கு என்னவென்று தெரியுமா ? இந்த பாலிடெக்னிக் எட்டு மணிக்கு ஆரம்பித்து விட்டது. நீ இடம் மாறி வந்திருக்கிறாய். நீ தெருவில்தான் நிற்க போற ! போடா போ !" என்ற இன்மொழிகளுடன் என்னுடைய பாலிடெக்னிக் வாசம் இனிதே ஆரம்பமானது ! விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை ! பாலிடெக்னிக் ஆரம்பித்த முதல் நாளே பத்து நிமிடம் லேட் ! அதற்காக எங்கள் ஆங்கில ஆசிரியரின் அன்பான அர்ச்சனை இது ! ஆனால் அவரது ஆசீர்வாதம் பலிக்கவே செய்தது ! பல வருடங்கள் வாடிக்கையாளர்களின் கணினிகளை பழுது பார்க்கும் பிரதிநிதியாகவும், விற்பனை பிரதிநிதியாகவும் வேலை பார்க்க நேர்ந்தது. அன்று என்னோடு லேட்டாக வந்து கம்பெனி கொடுத்த என் ஆருயிர் நண்பன் கந்தசாமி இன்று தன் குடும்ப நிறுவனத்தை நிர்வகித்து வருகிறான். நாங்கள் இருவரும் அன்று முதல் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு முடியும்வரை சேர்ந்தே இருந்தோம். அது என்னவோ தெரியவில்லை. அந்த ஆங்கில ஆசிரியருக்கும் எங்களுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது.

எங்களுடைய பாலிடெக்னிக் ஊரை விட்டு கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அடிக்கடி பஸ் எல்லாம் கிடையாது. காலையில் ஒன்றிரண்டு டவுன் பஸ் பாலிடெக்னிக் வழியாக போகும். அது தவிர காலையில் ஏழரை மணி அளவில் எல்லா மாணவர்களையும் புளி மூட்டை மாதிரி அடைத்துக்கொண்டு ஒரு தகர டப்பா காலேஜ் பஸ் உண்டு. அதுவே மாலையில் நான்கு மணிக்கு மீண்டும் மாணவர்களை ரோட்டருகில் கொண்டு விடும். அப்படி அந்த பேருந்தை தவற விட்டுவிட்டால், "Staff பஸ்" எனப்படும் அடுத்த தகர டப்பா வரும். அதில் கெஞ்சி கூத்தாடி ஏறிகொள்ளலாம். என்ன அந்த ஆங்கில வாத்தியார் அங்கேயே மானத்தை வாங்குவார். "இவனெல்லாம் இப்படிதான் சார். உருப்படவே மாட்டான். முதல் கிளாஸ்க்கே லேட்டா வந்தவன் சார். சும்மா நடக்க விடுங்க சார்".

அந்த மாதிரி ஒரு நாள் டோஸ் வாங்கும் போது திடீரென்று ஒரு குரல் "போனா போகட்டும் சார். எல்லாம் வயசு சார். தன்னால திருந்திடுவாங்க" என்று. என்னால் நம்பவே முடியவில்லை. பார்த்தால் ஒரு நடுத்தர வயதுடைய ஆசிரியர் ஒருவர் எங்களுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தார். யார் என்று விசாரித்து அறிந்ததில் அவர் எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மென்ட் தலைமை ஆசிரியர் என்றும் அவர் பெயர் ராமசுவாமி என்றும் தெரிந்து கொண்டேன். அன்று மதியம் அவருடைய டிபார்ட்மென்ட் பக்கம் சும்மா உலாத்தினேன். டிபார்ட்மென்ட் வாசலில் ஒரு ஓரமாக நின்று கொண்டு பசங்களோடு தம் அடித்து கொண்டிருந்தார். எனக்கு படு பயங்கர அதிர்ச்சி. ஒரு ஆசிரியர் தம், அதுவும் பசங்களுடன் என்னால் நம்பவே முடியவில்லை. என்னை பார்த்து "டேய் லேட் கோச் வா இங்கே" என்றார். என்னை அவருடைய அறைக்கு கூடி கொண்டு போனார். அறை முழுவதும் கம்யூனிஸ்ட் புத்தகங்கள், ஒரு ஓரத்தில் கார்ல் மார்க்ஸ் வாசகம். என்னைப்பற்றி விசாரித்திருப்பார் போல. என்னிடம் "ஏன் அடிக்கடி லேட்டாக வருகிறாய்? எங்கே இருந்து வருகிறாய் ?" என்றார். இதுவரை யாருமே என்னிடம் ஏன் லேட்? என்ன பிரச்சினை என்று கேட்டதில்லை. நான் அவரிடம் பாளையம்கோட்டையில் இருந்து வருகிறேன். சில நாட்கள் நேர் பஸ் லேட்டாக வருகிறது. பஸ் மாறி வருவதிற்கு அவ்வளவு வசதி கிடையாது என்று விளக்கினேன். அதை கேட்டவர் "சரி. என்னுடன் வா" என்று என்னை பிரின்சிபால் ரூமிற்கு அழைத்து சென்றார். எனக்கு ஒரே உதறல். அதுவும் எங்கள் பிரின்சிபால் மிகவும் கண்டிப்பானவர். அங்கு சென்று எனக்காக பரிந்து பேசி எனக்கு பதினைந்து நிமிடம் வரை லேட்டாக வந்தால் அனுமதிக்கும்படி கேட்டு கொண்டார். பிரின்சிபாலும் நல்ல மூடில் இருந்தார் போல. அவரும் "நெதைக்கும் லேட்டாக வரக்கூடாது. மத்தபடி பஸ் லேட் என்றால் பத்து நிமிடம் லேட் ஆனால் பரவாயில்லை" என்று பெரிய மனதுடன் ஒத்து கொண்டு ஆங்கில ஆசிரியரிடம் தான் அதை சொல்லுவதாக கூறினார். அன்று முதல் ராமசுவாமி சார் என்னுடைய தெய்வம் ஆனார்.

அன்று மாலையே அவருடைய ரூமிற்க்கு நன்றி சொல்ல போனேன். அவர் அங்கு இல்லை. அங்கிருந்த அடெண்டர் அவர் லேபில் இருப்பதாக சொன்னார். சரி என்று லேபிற்கு போனால் அங்கு ரூமில் பாதியை அடைத்துக்கொண்டு ஒரு டேப் ரிக்கார்டர் பெட்டி. பக்கத்தில் ஒரு டிவி பெட்டி. அதன் முன் ராமசுவாமி சார் உக்கார்ந்து கொண்டு ஏதோ டைப் அடித்து கொண்டிருந்தார். என்னை பார்த்தவர், என்னை அருகில் அழைத்தார். நானும் சென்று "நன்றி சார்" என்றேன். அதற்கு அவர் "பரவாயில்லை. நல்லா படிக்கணும். போயிட்டு வா" என்றார். சரி என்றவன் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவரிடம் "இது என்ன சார்" என்றேன் அந்த டிவி பெட்டியை காட்டி. அவர் அதற்கு இதுதான் கம்ப்யூட்டர் என்றார். உடனே நான் அவரிடம் "இது என்ன செய்யும் சார்" என்றேன். சிரித்தவர் "இது பல வேலைகள் செய்யும். ஒன்று செய். நீ செகண்ட் இயரில் எலக்ட்ரானிக்ஸ் மேஜர் எடு. நான் உனக்கு எதை பற்றி சொல்லி கொடுக்கிறேன். ஆனால் எலக்ட்ரானிக்ஸ் எடுக்க வேண்டுமானால் நீ தொண்ணூறு பெர்சென்ட் வாங்க வேண்டும். செய்வாயா?"என்றார். "செய்யறேன் சார்" என்று சொன்னேன். அன்று ஏற்பட்ட அனுபவம் என்னை கணினி துறைக்கு இழுத்து வந்து கிட்ட தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக விட மாட்டேன் என்கிறது. அவர் மட்டும் அன்று எனக்கு பரிந்து பேசி இரா விட்டால் நான் சிவில் துறைக்கு போய் இருப்பேன். மிகவும் நீண்டதொரு பதிவு இது. ஆனாலும் இந்த துறையில் நான் எப்படி நுழைந்தேன் என்று எழுதுவது முக்கியம் என கருதியதால் இந்த பதிவு.

அன்பன் கிராம்

என்னைப்பற்றி !

அன்பு வலைப்பூ நண்பர்களே சற்றே நெடிய பிரிவிற்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன் !

என்னைப்பற்றி ...

நான் அமெரிக்காவில் வசித்து வருமொரு கணினி பொறியாளன். நெடு நாள் வலைப்பூ வாசகன். ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களாக இந்த துறையில் உள்ளேன். பலரும் வலைப்பூவில் தங்கள் அனுபவங்களை எழுதுவதை கண்டு என்னுடைய நீண்ட அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

நான் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வுகள் இந்தியாவில் கணினித்துறை சற்று காலூன்ற தொடங்கிய கால நிகழ்வுகள். அப்பொழுதெல்லாம் கணினி என்றால் சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் வசதி படைத்தவர்களும், பெரிய கம்பெனிகளிலும் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. என்ட்ரி லெவல் என்று சொல்ல கூடிய கணணிகளே பல லட்சங்களுக்கு விற்று கொண்டிருந்த காலம் அது. அச்சமையத்தில் நான் ஒரு "Field Sales & Support Engineer", அதாவது கணினி விற்கும், சேவை செய்யும் பொறியாளனாக இருந்தேன். அதனால் பல பெரிய மனிதர்களுடன் பழகவும் அவர்களை அறிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிவுகளில் அவற்றில் மிக சுவையான, வித்தியாசமான அனுபவங்களை பகிர்ந்துகொள்ள எண்ணம்.என்னுடைய கன்னி முயற்சிக்கு தங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் கிராம்