Thursday, July 23, 2009

துறை மாறிய படலம்!

துணை பிரின்சிபால் இருக்கையில் எனதருமை ஆங்கில ஆசிரியர் அமர்ந்திருந்தார். எனக்கு அப்போது "கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனா ..." பழமொழி ஞாபகம் வந்தது. இந்த மனிதர் இங்கே எங்கு வந்தார் என்று யோசித்துகொண்டே, திரும்பிவிடலாமா என எண்ணினேன். அதற்குள் என்னை பார்த்துவிட்டார். "என்னலே இங்கே" என்றார். "ஒண்ணுமில்லே சார். துணை பிரின்சிபாலை பார்க்க வந்தேன்" என்றேன். "ஏலே அது நான் தாம்லே" என்றார்.

இது என்னடா நெல்லைக்கு வந்த சோதனை என்று நினைத்தவாறே எனக்கு துறை தவறாக ஒதுக்கபட்டிருப்பதாக கூறினேன். கோடை விடுமுறையில் அவருக்கு ப்ரோமோஷன் கிடைத்திருக்கும் போல. எல்லாம் என் நேரம். என்னுடைய ஆதங்கத்தில் சிறிது அழுத்தமாகவே கூறிவிட்டேன். அதை கேட்ட அவர் முகம் சிவந்துவிட்டது. திருவிளையாடலில் சிவாஜி என் பாட்டில் குற்றமா என்பது போல, உடனே மணி அடித்து உதவியாளரை கூப்பிட்டு என்னுடைய விருப்ப படிவத்தையும், துறை வாரி பட்டியல்களையும் எடுத்து வர சொன்னார். நானும் தருமி நாகேஷ் போல் நின்று கொண்டிருந்தேன். அவை வந்தவுடன் அவற்றை பார்த்தவர், "ஏலே முதல் முப்பது கோட்டியலில் நீயும் உண்டா? உன்ன மாதிரி இருபது கோட்டியல் எலக்ட்ரானிக்ஸ் கேகாம்லே. பின்னே மெக்கானிக்கல் துறைக்கு கொஞ்சம் நல்ல கோட்டியல் வேணுமின்னு உன்னை அங்க போட்டிருக்காக" என்றார். நான் உடனே எனக்கு மெக்கானிக்கல் படிக்க விருப்பம் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் இனி ஒன்றும் செய்ய இயலாது போ மெக்கானிக்கல் துறைக்கு என்று கூறிவிட்டார்.

நான் இதை விடுவதாக இல்லை. நேராக திரு.ராமசுவாமி அவர்களிடம் சென்றேன். நடந்ததை கூறினேன். அவர் வா என்னோடு என்று என்னை கூட்டிக்கொண்டு மீண்டும் துணை பிரின்சிபால் அறைக்கு சென்றார். என்னை மீண்டும் அங்கே பார்த்த ஆங்கில வாத்தியார்க்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. "என்னலே மறுபடி" என்றார். நான் பதில் சொல்லும் முன் திரு.ராமசுவாமி "சார் நீங்க கொஞ்சம் அந்த துறை பட்டியலை கொடுங்க" என்றார். உடனே ஆங்கில ஆசிரியர் "சார் இப்ப ஒன்னும் மாத முடியாது. எல்லாரும் சேர்ந்து தயாரித்த பட்டியல் இது. இனிமே மாற்றனும்னா தாளாளர் அனுமதி வேண்டும்." என்றார். திரு.ராமசுவாமி புன்னகைத்துக்கொண்டே, சரி சார் என்று சொல்லிவிட்டு பட்டியல்களை கையில் எடுத்து கொண்டு, என்னையும் கூட்டிக்கொண்டு நேராக தாளாளரின் அறைக்கு சென்றார். தாளாளரிடம் "சார் ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட். இந்த பையனிற்கு மெக்கானிக்கல் துறை ஒதுக்கபட்டிருக்கு. இவனை என் துறைக்கு மாற்ற வேண்டும்" என்றார். தாளாளர் திரு.ராமசுவாமிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தவர். அவர் உடனே "தாரளமா செய்யலாமே. ஒரு வார்த்தை மெக்கானிக்கல் துறை தலைவரிடம் சொல்லிடுங்க" என்றார். உடனே திரு. ராமசுவாமி "ஒரு நிமிடம் உங்க போனை உபயோகித்து கொள்கிறேன் சார்" என்று கூறி உடனே மெக்கானிக்கல் துறை தலைவருக்கு போன் போட்டார். தாளாளர் போன் என்றவுடன் மெக்கானிக்கல் துறை தலைவர் நேராகவே அங்கு வந்துவிட்டார். விஷயம் சொன்னவுடன் அங்கேயே ஓகே பண்ணிவிட்டார். தாளாளர் ஓகே பண்ணிய பிறகு குழுவாவது மண்ணாங்கட்டியாவது. இப்படியாகத்தானே நான் எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு மிகுந்த சிபாரிசில் வந்து சேர்ந்தேன். இத்தனை வருடங்கள் ஆகியும் எனக்கு அந்த ஆங்கில ஆசிரியர் வேண்டும் என்றே என் விருப்பத்திற்கு மாறாக என்னை மெக்கானிக்கல் துறைக்கு ஒதுக்கினார் என்றே தோன்றுகிறது. என்னை அவர் படுத்திய பாடு அப்படி.

அன்பன் கிராம்

Wednesday, July 22, 2009

கணினித் துறையில் முதல் கோணல் !!!

திரு .ராமசுவாமி என்னை எலக்ட்ரானிக்ஸ் பிரிவு எடுக்க சொல்லி இருந்தார். நானும் அவர் கூறியபடி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். நான் பாலிடெக்னிக்கில் படித்த காலத்தில் மெக்கானிக்கல் பிரிவிற்கும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவிற்கும் தான் மிகுந்த கிராக்கி இருந்தது. தேர்வில் முதல் முப்பது ரேங்க் எடுக்கும் மாணவர்கள் அவர்கள் விரும்பும் துறையை எடுத்துகொள்ளலாம். மற்றவர்களுக்கு தர வரிசைப்படி மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், எலெக்ட்ரிகல் என்று துறை ஒதுக்கப்படும். இதற்காக ஒவ்வரு வருடமும் சில ஆசிரியர்களை கொண்டு ஒரு குழு அமைப்பார்கள். அதில் முதலாம் ஆண்டை சேர்ந்த சில ஆசிரியர்கள், எல்லா துறை தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதன் தலைவராக பிரின்சிபால் அல்லது துணை பிரின்சிபால் இருப்பார். இவர்கள் ஒன்று கூடி மாணவர்களை துறை வாரியாக ஒதுக்குவர். ஒரு காலத்தில் மாணவர்களுக்கு துறை ஒதுக்குவதில் ஏற்பட்ட குழப்பங்களினாலும் அதனால் ஏற்படும் சச்சரவுகளை தவிர்க்கவும் இப்படி ஒரு ஏற்பாடு. எல்லாம் நமது நாட்டில் உள்ள காபினெட் முறை போல. இதிலும் வேண்டியவர்களுக்கு அவர்கள் விரும்பும் துறை கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் தில்லு முல்லு செய்ய எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும்.

மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் துறை கிடைத்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள். எலெக்ட்ரிகல் துறைக்கு ஒதுக்கப்பட்டவர்கள் தான் மிகவும் பாவம் செய்தவர்கள். அந்த துறையில் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருத்த காலம்.

எப்படியோ நான் முதல் முப்பது ரேங்க்கில் வந்து விட்டேன். இரண்டாம் ஆண்டிற்கான விருப்ப படிவத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறை என்று எழுதி கொடுத்தும் விட்டேன். நான் மிகவும் எதிர்பார்த்த இரண்டாம் ஆண்டின் முதல் நாளும் வந்தது. பாலிடெக்னிக்கில் நுழைந்த உடன் நோட்டீஸ் போர்டில் ஒவ்வொரு துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் பட்டியலை பார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சி! எனது பெயர் எலக்ட்ரானிக்ஸ் துறை பட்டியலில் இல்லை. மெக்கானிக்கல் துறை பட்டியலில் என் பெயர் இருந்தது. கண்ணில் கண்ணீர் முட்ட ஓடினேன் பாலிடெக்னிக் அலுவலுகத்திற்கு.

அங்கு இருந்த உதவியாளரிடம் கேட்டதிற்கு துறை ஒதுக்கும் குழுவின் தலைவரை போய் பார்க்க சொன்னார். நானும் அவர் யார் என கேட்க, அது துணை பிரின்சிபால் என்றார். சரி என்று மாடி ஏறி துணை பிரின்சிபால் அறைக்கு சென்றால் ...


அன்பன் கிராம்