Sunday, March 2, 2008

எழுத்தாளர்கள் சுஜாதா, ஸ்டெல்லா ப்ரூஸ் மறைவிற்கு அஞ்சலி !

தமிழ் வாசகர்களுக்கு கடந்த வாரம்தான் எத்தனை பேரிழப்பு !

தனது எளிய நடையில் பல விஞ்ஞான அறிவியல் கதைகள் எழுதி, தமிழ் மக்களை பெரிதும் கவர்ந்தவர். தமிழ் எழுத்தாளர்களில் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் திரு சுஜாதா. அவரது மறைவு இன்னும் நம்ப முடியவில்லை ! அவரின் கணேஷ் வசந்த் கதைகளை யாரால் மறக்க முடியும். அந்த ஜீனோவே நேரில் வந்து அவரை திருப்பி கொடுக்க வேண்டும்.

பட்ட காலிலே படும் என்பது போல, சுஜாதா அவர்களின் மறைவு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திரு. ஸ்டெல்லா ப்ரூஸ் அவர்களின் தற்கொலை செய்தி. நடிகர் திலகத்தின் சோதனை மேல் சோதனை பாட்டுதான் ஞாபகம் வருகிறது. எப்படிப்பட்ட எழுத்தாளர் ! ஆண் பெண் நட்பை எவ்வளவு நளினமாய் கையாண்டவர். அவரா தற்கொலை முடிவெடுத்தார் ? ஓர் தலை சிறந்த தமிழ் எழுத்தாளருக்கு இவ்வளவு வறுமை கொடுமையா ? அவரது வாசகர்கள் நாம் எல்லோருமே சேர்ந்து அவரை கை விட்டு விட்டோமோ ? மிகவும் வேதனையான விஷயம்.

அவர்கள் இருவரின் ஆத்மா சாந்தி அடைய என் அப்பன் குறுக்குதுறை முருகனை ப்ரர்த்திகிறேன்.

தமிழ் கதை உலகில் சுஜாதா அவர்களும், ஸ்டெல்லா ப்ரூஸ் அவர்களும் எழுதி வந்த காலம் மிகவும் பொன்னானது. அது நிஜமாகவே ஒரு கனா காலம் !

அன்பன்
கிராம்

வணக்கம்! வந்தனம்!

தன்தனத்தோம் என்று சொல்லியே ப்ளாகினில் எழுத, ஆமா எழுத,வந்தருள்வாய் கலைமகளே !!!

நண்பர்களே வணக்கம் !!!

ரொம்ப நாட்களாகவே என்னுடைய எண்ணங்களை, அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆவல். அது இன்று கை கூடியதில் மிக்க மகிழ்ச்சி.

நான் ப்ளாகிங்கை பொறுத்தவரை ஒரு ஏகலைவன்! ஆனால் ஏகப்பட்ட துரோனசார்யர்கள் எனக்கு. திரு.டோண்டு ராகவன் அவர்கள், திரு.டி.பி.ர். ஜோச·ப் அவர்கள், திரு. பாலா அவர்கள், திரு. இட்லி வடை அவர்கள் மற்றும் பலர். எல்லார் பெயரையும் எழுத பயமாய் இருக்கிறது. இருப்பது பத்து விரல்கள் தானே !

என்னை ஈன்றேடுத்து, ஆளாக்கிய என் அன்னையையும், எல்லாஆசான்களையும் மானசீகமாய் வணங்கி என் உளறல்களை ஆரம்பிக்கிறேன் !

இனி என்ன நான் எழுதி கொண்டே இருப்பேன். படித்து தொலைக்க வேண்டியது உங்கள் தலைவிதி

அன்புடன் கிராம் !