Wednesday, July 22, 2009

கணினித் துறையில் முதல் கோணல் !!!

திரு .ராமசுவாமி என்னை எலக்ட்ரானிக்ஸ் பிரிவு எடுக்க சொல்லி இருந்தார். நானும் அவர் கூறியபடி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். நான் பாலிடெக்னிக்கில் படித்த காலத்தில் மெக்கானிக்கல் பிரிவிற்கும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவிற்கும் தான் மிகுந்த கிராக்கி இருந்தது. தேர்வில் முதல் முப்பது ரேங்க் எடுக்கும் மாணவர்கள் அவர்கள் விரும்பும் துறையை எடுத்துகொள்ளலாம். மற்றவர்களுக்கு தர வரிசைப்படி மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், எலெக்ட்ரிகல் என்று துறை ஒதுக்கப்படும். இதற்காக ஒவ்வரு வருடமும் சில ஆசிரியர்களை கொண்டு ஒரு குழு அமைப்பார்கள். அதில் முதலாம் ஆண்டை சேர்ந்த சில ஆசிரியர்கள், எல்லா துறை தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதன் தலைவராக பிரின்சிபால் அல்லது துணை பிரின்சிபால் இருப்பார். இவர்கள் ஒன்று கூடி மாணவர்களை துறை வாரியாக ஒதுக்குவர். ஒரு காலத்தில் மாணவர்களுக்கு துறை ஒதுக்குவதில் ஏற்பட்ட குழப்பங்களினாலும் அதனால் ஏற்படும் சச்சரவுகளை தவிர்க்கவும் இப்படி ஒரு ஏற்பாடு. எல்லாம் நமது நாட்டில் உள்ள காபினெட் முறை போல. இதிலும் வேண்டியவர்களுக்கு அவர்கள் விரும்பும் துறை கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் தில்லு முல்லு செய்ய எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும்.

மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் துறை கிடைத்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள். எலெக்ட்ரிகல் துறைக்கு ஒதுக்கப்பட்டவர்கள் தான் மிகவும் பாவம் செய்தவர்கள். அந்த துறையில் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருத்த காலம்.

எப்படியோ நான் முதல் முப்பது ரேங்க்கில் வந்து விட்டேன். இரண்டாம் ஆண்டிற்கான விருப்ப படிவத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறை என்று எழுதி கொடுத்தும் விட்டேன். நான் மிகவும் எதிர்பார்த்த இரண்டாம் ஆண்டின் முதல் நாளும் வந்தது. பாலிடெக்னிக்கில் நுழைந்த உடன் நோட்டீஸ் போர்டில் ஒவ்வொரு துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் பட்டியலை பார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சி! எனது பெயர் எலக்ட்ரானிக்ஸ் துறை பட்டியலில் இல்லை. மெக்கானிக்கல் துறை பட்டியலில் என் பெயர் இருந்தது. கண்ணில் கண்ணீர் முட்ட ஓடினேன் பாலிடெக்னிக் அலுவலுகத்திற்கு.

அங்கு இருந்த உதவியாளரிடம் கேட்டதிற்கு துறை ஒதுக்கும் குழுவின் தலைவரை போய் பார்க்க சொன்னார். நானும் அவர் யார் என கேட்க, அது துணை பிரின்சிபால் என்றார். சரி என்று மாடி ஏறி துணை பிரின்சிபால் அறைக்கு சென்றால் ...


அன்பன் கிராம்

No comments: